” நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

 தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
 ஜனமும் மரணமும் இன்றித் தீருமே
 இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்”
உத்தானபாதன் எனும் அரசனுக்கு கரூசி , சுனீதி எனும் இரு மனைவிகள்.

கரூசிக்கு உத்தமன் என்ற மகனும் , சுனிதிக்கு துருவன் என்ற மகனும் பிறந்தனர்.  உத்தமனை விட துருவன் இளம் சிறுவன். ஆனாலும் தந்தைக்கு துருவனை விட உத்தமன் மீதே அதிகப் பிரியம். 

ஒரு நாள் , தந்தையின் மடியில் உத்தமன் அமர்ந்து விளையாட்டுப் பேச்சு பேசி சிரித்து மகிழ்வதனை துருவன் கண்டான். தானும், தந்தையின் மடியில் அமர்ந்து விளையாடி மகிழ விரும்பினான். ஓடிச் சென்று தந்தையின் மடியில் அமர்ந்தான். சிறிது தொலைவில் இருந்து கரூசி இதனைக் கண்டு துருவன் மீது வெறுப்பு கொண்டு துருவனை மடியில் இருந்து இழுத்து தூரமாய் தள்ளிவிட்டாள்.

துருவன் அழுது கொண்டே, தன் தாயிடம் சென்று நடந்ததைக் கூறினான்.

முன் ஜென்மத்தில் நானும் , நீயும் செய்த கர்மப் பலன்படி, இத்துன்பம் அடைந்தோம். இனி, புண்ணியக் காரியங்களை உன் வாழ் நாளில் செய். அதன் பயனாய் நன்மை கிட்டும் என்று துருவனுக்கு சமாதான மொழி கூறினாள் துருவனின் தாய்.

நெடு நேரம் , தாயின் வார்த்தைகளைச் சிந்தித்தவனாக இருந்தான். ஒரு முடிவிற்கு வந்தான்.

தன் தாயிடம் கூறினான்….

என் சகோதரன், தந்தையைப் போலவே அவருக்குப் பிறகு அரசாளட்டும்.
நான் என் முயற்சியாலேயே, அதனை விட உயர்ந்த பதவி பெறுவேன்.  நான் காட்டிற்குச் சென்று திருமாலைக் குறித்து தவம் செய்யப் போகின்றேன் என்று கூறினான்.

அரசனை விட உயர்ந்த பதவி ஒன்று உண்டு …. ஆனால் அது எது என்பதும், அதனைப் பற்றிய முழு அறிவும் முழுமையானத் தெளிவும் இல்லை. 

சப்தரிஷிகளைச் சந்தித்துக் கேட்டான். ஒருவரும் பெறாத உன்னதமான உயர்ந்த இடம் பெற என்ன வழி என்று வினவினான்?

திருமாலைச் சரணாகதி அடைந்து , அவரையே தியானி என்ற பதில் மட்டும் அவர்களிடமிருந்து கிடைத்தது.

ஸூரமந்திர தருமூல நிவாஸ
சய்யா பூதல மஜினம் வாஸ;
ஸர்வ பரிக்ரஹ போக தயான:
கஸ்ய ஸூகம் ந கரோதி விசாக:

ஆலயங்களின் அருகில் உள்ள மரத்தடியில் வாசம்; மண் தரையில் உறக்கம்;
உடைகளையும் மோகங்களையும் துறந்து விடுதல்;
இப்படிப்பட்ட வைராக்கியம் தானே சுகம் அளிக்க வல்லது
என்பதனை சப்தரிஷிகளிடம் இருந்து அறிந்து, வைராக்ய சிந்தனை கொண்டு 
திருமாலைத் தியானிக்கலானான்.

ஞான வைராக்யம் எப்போதுமே பிறவற்றைவிட உயர்ந்தது தான் என்பதனை உண்ர்ந்தான் துருவன்.

திருமாலின் அன்பினால், துருவன் பெறும் மகிழ்ச்சி அடைந்தான்.
சாகாவரம் பெற்று வட திசையில் ஒளிவீசும் நட்சத்திரமாக “ துருவ “ நட்சத்திரமாக பிரகாசிக்கின்றான்.
துருவனின் மகிழ்ச்சி உன்னதமான ஒன்று தானே!

யோகாதோ வா போகாதோ வா
ஸங்காதோ வா ஸங்கவி ஹீன:

யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி நந்ததயேவ!!

மகிழ்ச்சி என்பது சிலருக்கு யோகத்தில் கிடைக்கிறது.
சிலருக்கு மகிழ்ச்சி போகத்தில் கிடைக்கிறது;
சிலருக்கு மற்றவர்களுடன் அளவளாவிக் கொண்டிருப்பதில் கிடைக்கின்றது.
சிலருக்குத் தனிமையில் மகிழ்ச்சி கிடைக்கின்றது.

ஆனால், உண்மையான மகிழ்ச்சி இறையை எண்ணி,
பிரம்மத்துடன் ஒன்றிட செய்யும் முயற்சியால் கிட்டும் இன்பமே
அந்த ஆத்மாவிற்கும், ஆன்மாவிற்கும் கிட்டும் 
உண்மையான முழுமையான மகிழ்ச்சி.