காரகத்துவங்கள் – பத்தாம் பாவம் – பகுதி 2

604021_536242036466304_1997401455_n

குருபுகர் கதிர்மால் இன்னொளி

குணம்பல வீன மாக

ஒருபன்னி ரண்டில் ஆறில்

எட்டினில் ஊறி நின்றால்

வருவது பொல்லாக் கன்மம்

வழங்குவன் பத்தில் ராகு

எரிகதிர் கூடக் காசி

யாத்திரை இவனே போவன்!

குருவும் சுக்கிரனும் சூரியனும் புதனும் வலு இழந்து 6, 8, 12 ஆம் ஸ்தானங்களில் மறைந்து நின்றிருந்தால், அந்த ஜாதகன் பாவத் தொழில் செய்து பிழைப்பான்.

பத்தாம் இடத்தில் இராகுவோ, சூரியனோ ஈரியிருந்தால் அந்த ஜாதகன் காசி போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு புனித யாத்திரை போவான்.

மீனமே தானம் பத்தாய்

விளங்கிடும் மதியாய் மோட்சம்

தானவன் சுங்க னோடும்

கூடியே உச்சம் சார்ந்து

ஆனகேந் திரத்தில் ஏற

அவன்கங்கா ஸ்தானம் ஆடப்

போனவன் என்று பிள்ளை

பூமியில் வருநாள் பேசே.

மீன ராசி பத்தாமிடமாய் அமைந்திருக்க அந்த மீன ராசியில் சந்திரன் நின்றிருந்தால், அந்த ஜாதகன் முக்திப் பேற்றை அடைவான்.

பத்துக்குடையவன் சுக்கிரனுடன் சேர்ந்து உச்சம் பெற்றுக் கேந்திர ஸ்தானங்களில் நின்றிருந்தால், அந்த ஜாதகன் கங்கையில் நீராடும் பாக்கியம் பெறுபவன் என்று அவன் பிறந்த அன்றைக்கே அழுத்தமாக எடுத்துரைக்கலாம்.

வியமதில் மாலை அந்த

வியபதி கர்ம மாகில்

நயமுளோர் புதனைப் பார்க்க

நல்லபுண் ணியங்கள் செய்வான்!

தயவோடு பத்தில் பூர்ண

சந்திரன் இருந்து வாழ்ந்தால்

அயனிட்ட அதிகா ரத்தால்

அவனும்கா சிக்கே செல்வான்!

பன்னிரெண்டாமிடத்தில் புதன் அமர்ந்திருக்க அந்த புதனைச் சுபர்கள் பார்வையிட பன்னிரெண்டுக்குடையவன் பத்தாமிடத்தில் அமர்ந்திருந்தால், அந்த ஜாதகன் புண்ணியச் செயல்கள் பல செய்வான்.

வளர்பிறைச் சந்திரன் பத்தாமிடத்தில் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகன் பிரமதேவன் விதித்த விதிப்படி காசிக்கு தீர்த்த யாத்திரை மேற்கொள்வான்.

பாவர்கள் பலவா னாகப்

பத்தினில் சாக சங்கள்

சீவர்கள் பலவி னங்கள்

திருந்தநற் கருமம் செய்யான்!

கோவயில் பத்தின் கோளன்

குருபுதன் இவரைக் கொண்டு

ஆவதே யாக கன்மம்

அளிக்கச்சிந் திக்க லாமே!

பாவக் கிரகங்கள் பலம்பெற்று பத்தாமிடத்தில் நின்றிருந்தால் அந்த ஜாதகன் வீரதீரச் செயல்கள் புரிபவனாவான்.

பத்தாம் இடத்தில் உள்ள கிரகங்கள் பலவீஎனமுற்று நின்றிருந்தால், அந்த ஜாதகன் செய்வான திருந்தச் செய்யாதவாக இருப்பான்!

பத்துக்குடையவன், குரு , புதன் ஆகியோரின் நிலைமையை வைத்து அந்த ஜாதகன், யாகம் முதலிய தெய்வீக கர்மங்களைச் செய்வானா, செய்ய மாட்டானா என்று நிர்ணயிக்க வேண்டும்.

Advertisements

One thought on “காரகத்துவங்கள் – பத்தாம் பாவம் – பகுதி 2

Comments are closed.