திருவருள்

எந்தாயும் தந்தையாய் சிவகுருநாதா

சிந்தையிலே நிறைந்தபின் சிவகுருநாதா

விந்தைகளைப் புரிந்தவனே சிவகுருநாதா

வந்தனங்கள் கோடிசொன்னோம் சிவகுருநாதா…

அன்புருவே அழகுருவே சிவகுருநாதா

ஆனந்தத்தின் எல்லை நீயே சிவகுருநாதா

பொன்னடியாய் உன்னடியை சிவகுருநாதா

போற்றிதினம் பற்றுகிறோம் சிவகுருநாதா

இருள்சூழ்ந்த உலகிற்கு சிவகுருநாதா

எரிவிளக்கு நீதானே சிவகுருநாதா

மருள்நீக்கும் மாமணியே சிவகுருநாதா

அருள்காட்டி ஆண்டிடுவாய் சிவகுருநாதா

நாதத்திற்கு அதிபதியே சிவகுருநாதா

நத்திஉந்தன் தாள்பணிந்தோம் சிவகுருநாதா

போதகனே புண்ணியனே சிவகுருநாதா

போந்தெம்பில் புகுந்திடுவாய் சிவகுருநாதா

ஐந்தெழுத்தின் மந்திரமே சிவகுருநாதா

ஐயமில்லா மெய்ப்பொருளே சிவகுருநாதா

எந்தையாக உடனிருந்து சிவகுருநாதா

எந்நாளும் எமைக்காப்பாய் சிவகுருநாதா

மரணபயம் நீக்கிடவே சிவகுருநாதா

அரணாக நீஇருப்பாய் சிவகுருநாதா

உரமான மனம்கொடுத்து சிவகுருநாதா

உறுதியளி இன்பநிலை சிவகுருநாதா

ஓங்கார மானவனே சிவகுருநாதா

ஓங்குபுகழ் பாடுகிறோம் சிவகுருநாதா

ஓமொலியின் உள்ளொளியே சிவகுருநாதா

ஓமறிய அருளிடுவாய் சிவகுருநாதா

ஞானமோகம் பெற்றிடவே சிவகுருநாதா

ஞானகுரு வேண்டுகிறோம் சிவகுருநாதா

ஞானவரம் நீகொடுத்து சிவகுருநாதா

ஞானவிளக் காயிருப்பாய் சிவகுருநாதா

பொன்மனதில் ஆடுகின்ற சிவகுருநாதா

புனித ஞானம் புகட்டிடுவாய் சிவகுருநாதா

அன்னையுள்ளம் எமக்கருளி சிவகுருநாதா

வினைப்பயனை விரட்டிடுவாய் சிவகுருநாதா

பசுபதி பாசமதை சிவகுருநாதா

பக்குவமாய் வெல்லுவதற்கே சிவகுருநாதா

பக்கத்துணை நீயிருந்து சிவகுருநாதா

பக்தியிலே திளைக்கவைப்பாய் சிவகுருநாதா!

பாசுபதம் நீயளித்து சிவகுருநாதா

பாவசுமை நீக்கிடுவாய் சிவகுருநாதா

பூவுலக வாழ்க்கையிலே சிவகுருநாதா

பூமணத்தை நுகரவைப்பாய் சிவகுருநாதா

மேவிவரும் யோகமதை சிவகுருநாதா

பாவியவன் தாண்டவேண்டும் சிவகுருநாதா

மாயைகன்மம் மலங்களையே சிவகுருநாதா

தீயெனவே சுட்டெரிப்பாய் சிவகுருநாதா

சந்தையிலே பலசரக்கு சிவகுருநாதா

வந்துவந்து போவதுபோல் சிவகுருநாதா

பந்தபாசம் உடன்வந்து சிவகுருநாதா

பந்தலிட்டுப் படருதையா சிவகுருநாதா

சிவசக்தி நாயகனே சிவகுருநாதா

சிந்தும்கண்ணீர் துடைத்திடுவாய் சிவகுருநாதா

சொந்தமென்று நீரிருக்க சிவகுருநாதா

சுகமின்றி வேறுண்டோ சிவகுருநாதா

காதல்மலர்த் தோட்டத்திலே சிவகுருநாதா

கீதைமொழிச் சொன்னவனே சிவகுருநாதா

பாதைவிட்டு செல்மனதை சிவகுருநாதா

பாமொழியால் தீர்த்திடுவாய் சிவகுருநாதா

பலபிறவி நானெடுத்தேன் சிவகுருநாதா

பலதுன்பம் நானுற்றேன் சிவகுருநாதா

பல்லுலகைப் படைத்தவனே சிவகுருநாதா

பிறவிப்பிணி நீக்கிடுவாய் சிவகுருநாதா

பெயருக்காய் வாழுகிறோம் சிவகுருநாதா

பிறப்பறுக்க வேண்டுமைய்யா சிவகுருநாதா

அபயம்தந்து ஆதரிப்பாய் சிவகுருநாதா

அபி நயத்தின் வித்தகனே சிவகுருநாதா

இறப்புபிறப்பு அற்றவனே சிவகுருநாதா

இறக்குமுயிர் ஏங்குதைய்யா சிவகுருநாதா

இரவுபகல் அற்றவனே சிவகுருநாதா

இருந்திடுவாய் என்னுடனே சிவகுருநாதா

இன்பமது நான்குடிக்க சிவகுருநாதா

இன்னமுது நீகொடுப்பாய் சிவகுருநாதா

குமுதவிழி குளிர்ச்சியிலே சிவகுருநாதா

குடையாகி நிழல்தருவாய் சிவகுருநாதா

உயிர்க்கொலைகள் செய்திட்டால் சிவகுருநாதா

உண்மையருள் கிட்டிடுமோ சிவகுருநாதா

பெண்மையிலே தாய்மைவைத்த சிவகுருநாதா

உண்மையினை விளக்கிடுவாய் சிவகுருநாதா!

தொல்லுலகைப் படைத்தவனே சிவகுருநாதா
தள்ளல்மனம் தடுத்திடுவாய் சிவகுருநாதா
கல்லுருவில் கருணைகாட்டும் சிவகுருநாதா
சொல்லினிலே தூய்மைசேர்ப்பாய் சிவகுருநாதா
மண்ணிலே மரம்வளர்த்தாய் சிவகுருநாதா
கனிகொடுத்து கனம்கொடுத்தாய் சிவகுருநாதா
மனிதனுக்கு விதிவிலக்கோ சிவகுருநாதா
பிணிகொடுத்துப் பாவம்தந்தாய் சிவகுருநாதா
வேரிருக்க மரம் வளரும் சிவகுருநாதா
நீரூற்றி நீவளர்த்தாய் சிவகுருநாதா
வேரின்றி மனிதர்கூட்டம் சிவகுருநாதா
பாரதனில் உலவவிட்டாய் சிவகுருநாதா
சோறின்றிப் பிணமாவார் சிவகுருநாதா
சாறின்றிச் சக்கையாவார் சிவகுருநாதா
சாறாக நீஇருக்க சிவகுருநாதா
பேறுவேண்டும் பரம்பொருளே சிவகுருநாதா
கல்லுக்குள்ளே ஈரம்வைத்தாய் சிவகுருநாதா
கல்நெஞ்சர் ஏன்படைத்தாய் சிவகுருநாதா
மலையோடு அருவிகண்ட சிவகுருநாதா
மலைப்பினையே நீக்கிடுவாய் சிவகுருநாதா
பட்டமரம் துளிர்விடவே சிவகுருநாதா
பண்ணிசைத்து மீட்டவனே சிவகுருநாதா
பட்டதுயர் ஒன்றிரண்டா சிவகுருநாதா
பட்டியலை நீட்டுகிறேன் சிவகுருநாதா
நிலம்தோன்று நாள்முதலாய் சிவகுருநாதா
புல்பூண்டாய் இருப்பவன் சிவகுருநாதா
அன்றுமுதல் இன்றுவரை சிவகுருநாதா
என்னிலையை நீயறிவாய் சிவகுருநாதா
எத்தனையோ பிறவிதந்தாய் சிவகுருநாதா
எதிர்நீச்சல் போடவைத்தாய் சிவகுருநாதா
அத்தனை பிறவியிலும் சிவகுருநாதா
அடிதொழவே மறந்தேனோ சிவகுருநாதா
புல்லாகப் பிறந்தேனோ சிவகுருநாதா
புவிமகிமைக் காத்தேனோ சிவகுருநாதா
பால்தரும் பசுவிற்கு சிவகுருநாதா
பசிநீக்க மறுத்தேனோ சிவகுருநாதா
நீர்கோத்து நின்றேனோ சிவகுருநாதா
நிலம்வாட விட்டேனோ சிவகுருநாதா
பாலையென வரண்டேனோ சிவகுருநாதா
பாவத்தை ஏற்றேனோ சிவகுருநாதா
Advertisements